Monday, November 21, 2011


எனக்கும் அது தேவைதான்!

பாகம்பிரியாள்

செய்தித்தாள் வந்தவுடன் தினம் பாகப் பிரிவினைதான்!
ஓடும் பேருந்தில் இடம் பிடிக்க அப்பாவுக்குத் தேவை ஒரு பக்கம்!
அம்மாவிற்கோ மாவு சலிக்க கைக் கொடுக்கும் தோழி!
அண்ணியும் அவ்வப்போது தேடுவாள், பக்கங்களை.
அலமாரியில் புடவையின் கீழ் அழகாய் விரிக்க!
தம்பிக்கு அவசியம் வேண்டும், வேலைச் செய்திக்கான பக்கம்!
சுட்டிக் குழந்தைகளும் தேடியே வந்திழுப்பர்
கத்திக் கப்பலும் பொம்மையும் செய்து பார்க்க!
மீதம் தனித்திருக்கும் ஒரு தாள் என்னைப் போல்.
எனக்கும் அது தேவைதான்.
என்றோ முகிழ்த்த காதல் முறிந்து போனதால்,
முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொள்ள!

====================
  Aug 25, 2009


யானையும் காதலும்!
பாகம்பிரியாள்

காதலும் யானையைப் போன்றுதான்!
அன்பின் இழை அகப்பட்ட புதிதில்,
கட்டிப்போடப்பட்டிருந்தாலும்
குட்டி யானையைப் போல் குறுகுறுவென்று
கண்ணில் பட்டதை எல்லாம்
தொட்டுப் பார்க்கும், தட்டிப் பார்க்கும்!
அன்பின் இழை இறுகிவிட்டாலோ
கம்பீரமாய், ஓரிடத்திலேயே நின்றுகொண்டு
அமைதியாய் அசை போட்டுக்கொண்டிருக்கும்
அன்பின் நினைவுகளை!

=====================
படம்: அண்ணாகண்ணன்
Aug 17, 2009 
சென்னை ஆன்லைனில் வெளியானது  

எதிரும் புதிரும்?


எதிரும் புதிரும்?
  

பாகம்பிரியாள்

நீயும் நானும், எதிரும் புதிருமாய்
ஒரு கோப்பை தேநீர் மற்றும்
ஓராயிரம் நினைவுகளை
ஓசையின்றி அருந்திக் கொண்டிருக்கிறோம்.

கை பட்டு உடைந்த
கோப்பைத் துண்டுகளை நீயும்,
கண்பட்டு உடைந்த
நினைவுகளை நானும்,
மௌனமாய்ப்
பொறுக்கிக் கொண்டிருக்கையில்
மனசுக்குள் ஓடுகிறது ஒரு கேள்வி!

"
முதலில் முடிக்கப் போவது யார்?"


================================
ஓவியம்: ஏ.பி. ஸ்ரீதர்
Aug 07, 2009சென்னை  ஆன்லைனில் வெளியான கவிதை 

பூவுக்குப் பூ


பூவுக்குப் பூ
பாகம்பிரியாள்
 
விட்டு விட்டுப் பெய்த மழையெல்லாம்
வெட்டி விட்டது என் வியாபாரத்தை.
உதிர்ந்த பூக்களின் குவியலோடு,
ஓரமாய் வாடியது என் அன்றாட வரவும்,
ஏங்க பூக்காரரே, இந்தாப்பா பூ”, -இதில்
ஏதும் என் செவிக்குள்ளே செல்லவில்லை.
துயர உலகில் சஞ்சரித்த என்னை,
துள்ளிக் குதிக்கவே  வைத்தது
பூக்கார்”    என்று காற்றிலே மிதந்து வந்த
பிஞ்சுக் குரலொடு ஒட்டி வந்த கையசைப்பும்!
அண்ணாந்து பார்த்தேன். பூத்திருந்தது பூ முகம்!
பூவுக்குப் பூ தரச் செல்லும்  பெருமிதத்தில் நான்!

என் கன்னங்கள்!

என் கன்னங்கள்!

பாகம்பிரியாள்

மின்னஞ்சலில் வரும் காதல் தூது எல்லாம் எனக்கு
எழுத்துக்களின் மௌன ஊர்வலமாகவே தோன்றுகிறது.
கடிதங்களில் தென்படும் வரிகள் எல்லாம்
கரும் எழுத்துக்களின் நடனமாய் மாறி விடுகின்றன. .
குறுஞ்செய்தியாய் வருபவை  எல்லாம்
குறுகுறுப்புக்கு அவ்வப்போது  தீனி போடும்.
இவை எல்லாம் என் காதலைக் கட்டிக்காக்கும்
என்று எண்ணியே இறுமாந்திருந்தேன்!
ஆனால்
குழைவான உன் குரலைக் கேட்டவுடன்
குப்பெனச் சிவக்கும் என் கன்னங்கள்
காட்டிக் கொடுத்து விடுகின்றன.. என் காதலை!
படத்திற்கு நன்றி

Tuesday, March 24, 2009

காதல் சதுரங்கம்!

காதல் சதுரங்கம்! 
எதிரும் புதிருமாய் இருப்பதிலேயே பாதி
இளமை கற்பூரமாய் கரைந்து விடுகிறது.
நீ, நான், நம் நினைவுகள்  சாட்சியாக 
நித்தம் நடைபெறுகிறது காதல் சதுரங்கம்! 
அழகாய் அணி வகுத்து வைத்திருப்பதை உன் 
பார்வைக் கணையால் கலைத்து விடுகிறாய்.
அதையும் மீறி வீரர்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்தால், 
அழகு சிரிப்பொலிக்கு அனைவரும் சரணாகதி! 
நிலம் பறிக்கும் பாய்ச்சல் குதிரைகள் எல்லாம் 
உனைக்கண்டதும் காய்ச்சலில் படுத்து விடுகின்றன!
மோதியும் அசையாத யானைக் குன்றுகள் எல்லாம் உன்
மதுரக் குரல் முன்னே குழந்தையாகி மண்டியிடுகின்றன! 
என் மதியூக மந்திரி மயங்கியேக் கிடக்கிறார் அருகில்.
உன் பார்வை வாளால் வெட்டப்பட்ட என் நினைவுகளைப் பார்! 
இந்த காதல் சதுரங்கம் எனக்கு ஒரு பாடம் கற்றுத்தந்தது.
வெற்றிப்பெற வரும் வாய்ப்புகளை நழுவ விடுவதுதான்! 
எனை வெல்ல வேண்டும் என்ற  நினப்பில் எனை நீ நெருங்குவாய்.
அந்தக் கணத்திற்காக நான் தினமும்  நூறு முறை தோற்கத் தயார்!   
பாகம்பிரியாள். 
 
 

Monday, March 2, 2009

பஞ்சபூதமாய் அவள்!


பாகம்பிரியாளின் கவிதை- 
காதல் என்று வந்து விட்டாலே நூதனமான உதாரணங்கள், தானே கவிதைகளில் முளைத்து விடும். கற்பனைக் குதிரையின் வேகத்துக்கு அளவுண்டோ! சிறிய பனித்துளி முதல் வானம் வரை காதல் கவிதையின் சுவடும் சாயலும் படிந்திருக்கும். அந்தச் சாயலின் வரிகள் பொதிந்த கவிதை இதோ உங்கள் முன்னால்!

பஞ்சபூதமாய் அவள்! 
மேனியெங்கும் பூக்கள் அலங்கரிக்க
மரகதப்பாய் விரிக்கும் பூமி அவள்.
மாந்தர்க்கு வயிறு குளிர அள்ளித்தரும்
மாதாவாம் மண் மகளின் மடியாய் அவள்.
மௌனத்தவம் புரிந்து பூமியின் பரப்பெங்கும்
பயிர்க்கோலம் கொண்ட அழகு வயலாய் அவள்.
 
கலகலவென்று அலைந்தாடும்  நெல்மகளின்
கால்வருடும் தெளிய நீரோடையாய் அவள்.
பொங்கிச் சிரித்து குதித்தோடி பொன்னான 
பூமியெங்கும் நனைக்கும் ஆற்று நீர் அவள்.
அழகு முத்தும் சங்கும் அள்ளித் தரும்
ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் அவள்.
 
போகும் வழியெலாம் பூக்களின் தலை கலைத்து
புதுக் கோலம் காண வைக்கும் தென்றலவள்.
வாசமலர் இதழ்களையெல்லம் இதமான 
வண்ணக் குவியலாக்கும் தென்றலவள்.
பூக்காட்டின் உள்ளே புகுந்து விளையாடி
போகும் வழியெல்லாம் வாசத் தடம் பதிக்கும் தென்றலவள்.

அனைத்தையும் அள்ளித் தின்றும் ஆத்திரமடங்காமல்
ஓங்கி எரியும் ஊழித்தீயாய் ஆடும் அவள்.
அன்பின் வழிகண்ட மாந்தரெல்லாம்
அதத்தில் ஏற்றி வைத்த அணையா விளக்காய் அவள்.
கருநீலப் போர்வையை கிழித்தெறிந்து
காலை வணக்கம் சொல்லும் கதிரவனாய் அவள்.

வண்ணம் கொண்ட விண் மீன் பூக்களை இறைத்து
வைத்திருக்கும் வான் வெளியாய் அவள்.
பால்நிலவெனும் தொட்டிலில் துயிலும்
பூமிக் குழந்தைக்கு குடை பிடிக்கும் மேகம் அவள். 
அன்பையும், காதலையும்தன்னுள் அடக்கிக் கொண்ட
அகண்ட விண் வெளியாய் நிறைந்திருக்கும் அவள்.